புதுடெல்லி: மக்களவை குளிர்காலக்கூட்டத்தொடர் இன்றுடன் முடிவடைந்ததையடுத்து தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டது. அதற்கும் முன்பாக ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரண்டு மசோதாக்களை 27 மக்களவை உறுப்பினர்கள், 12 மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மக்களவையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். அம்பேத்கர் குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். அமளிக்கு இடையே, ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரண்டு மசோதாக்களை கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானத்தை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கொண்டு வந்தார். குரல் வாக்கெடுப்பின் மூலம் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டுக்குழுவில் மக்களவையை சேர்ந்த 27 உறுப்பினர்களும், மாநிலங்களவையை சேர்ந்த 12 உறுப்பினர்களும் இடம் பெற்றுள்ளனர். பாஜகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், பிபி சவுத்திரி, காங்கிரஸ் எம்பி பிரியங்கா காந்தி வத்ரா உள்ளிட்ட மக்களவை உறுப்பினர்கள் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
இதையும் படிங்க: நெல்லை நீதிமன்ற வாசலில் வைத்து இளைஞர் படுகொலை - என்ன காரணம்?
அரசியலமைப்பு சட்டத்தில் ஒரு திருத்தத்தை கோரும் மசோதா உட்பட ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரண்டு மசோதாக்கள் கடந்த செவ்வாய்கிழமையன்று மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. இன்று இந்த மசோதாக்கள் கூட்டுக்குழுவுக்கு அனுப்பும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சில கட்சிகளுக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் இரண்டு மசோதாக்களை ஆய்வு செய்யும் கூட்டுக்குழு உறுப்பினர்களின் எண்ணி்ககையானது 31ல் இருந்து 39 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்த புதிய மக்களவை எம்பிக்களான பைஜயந்த் பாண்டா, சஞ்சய் ஜெய்ஸ்வால் ஆகியோர், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த சோட்டலால், சிவசேனாவை சேர்ந்த அணில் தேசாய், லோக்ஜனசக்தி(ராம்விலாஸ் பாஸ்வான்) கட்சியை சேர்ந்த சாம்பவி, சிபிஐஎம் கட்சியை சேர்ந்த கே.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கூட்டுக்குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான இரண்டு மசோதாக்களை ஆய்வு செய்யும். 39 பேரைக் கொண்ட இந்த குழுவில் பாஜகவை சேர்ந்த 12 பேர் உட்பட தேஜகூட்டணியின் 17 பேர் இடம் பெற்றுள்ளனர்.