புதுடெல்லி: குன்னூர் அருகே கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி MI-17VS ரக இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் "மனிதத் தவறு" என்று நாடாளுமன்றக் குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி இந்திய ராணுவத்தின் MI-17VS ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத், ஆயுதப்படை வீரர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
நிலைக்குழு அறிக்கை
இந்நிலையில், இந்த விபத்துக்கான காரணம் குறித்து கடந்த செவ்வாயன்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்புக்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதில், 13வது பாதுகாப்பு திட்ட காலகட்டத்தில் இந்திய விமான படையில் 2018-19 இல் 11 விபத்துகள், 2021-22 இல் ஒன்பது விபத்துகள் உட்பட மொத்தம் 34 விபத்துகள் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித தவறு
மேலும், அந்த அறிக்கையில் விபத்துக்குள்ளான விமானங்கள் வகை, விபத்து நிகழ்ந்த தேதி, அதற்கான காரணம் உள்ளிட்டவை வகைப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதி விபத்துக்குள்ளான முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத் சென்ற MI-17VS ரக ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் HE(A) "மனிதத் தவறு" (aircrew) என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 34 விபத்துகளை குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், விசாரணைக் குழுக்களின் பரிந்துரைகள், செயல்முறை, நடைமுறை, பயிற்சி, உபகரணங்கள், செயல்பாடுகள், பராமரிப்பு ஆகியவை விபத்து மீண்டும் நிகழாமல் தடுக்கும் நோக்கத்துடன் முழுமையாக மதிப்பாய்வு செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
முன்னதாக, பிபின் ராவத் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி, முதல் கட்ட அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த ஆய்வறிக்கையில், வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் தான் இந்த விபத்திற்கு காரணம் என்றும், இயந்திர கோளாறோ, நாச வேலையோ, அலட்சியமோ காரணமில்லை என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தமிழக காவல் துறையினரிடமும் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் காவல்துறை தரப்பிலும் அடர்ந்த மேகங்கள் பகுதியில் சென்ற போது விபத்து ஏற்பட்டதாகவும், அதன் பின்னணியில் எந்த சதியும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், டெக்கினிக்களாக இவைகளை உறுதிப்படுத்த ஆதாரங்கள் கிடைக்காததால் விசாரணையை நிலுவையில் வைத்திருந்த காவல்துறை பிபின் ராபத் ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணையை கைவிடுவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.