திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலை, நெல்லிவாசல் மலை கிராமத்திலுள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, அக்கிரமாத்திலுள்ள பள்ளி மாணவர்கள் தொடர்ந்து நான்காவது நாளாக வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் கரோனா பொது முடக்கத்திற்கு பின்னர், கடந்த19ஆம் தேதியிலிருந்து, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டன. இந்த நிலையில், தங்கள் கிராமத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நெல்லிவாசல் பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்கள் நான்காவது நாளாக இன்றும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்று நாட்களாக போராட்டம் நடத்தியும், இதுவரை எந்த அரசு அலுவலர்களும் எங்களை வந்து பார்க்கவில்லை. மலைவாழ் மாணவர்கள் மற்றும் மக்களை அரசு வஞ்சிப்பது வேதனை அளிக்கிறது. எங்களுக்கு உயர்கல்வி கிடைக்கும்வரை இந்த போராட்டம் தொடரும் என அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
தொடர்ந்து, என்ன காரணத்திற்காக அரசு, இந்த மலைவாழ் மக்களுக்கு, கல்வி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தருவதில் காலம் தாழ்த்திவருகிறதோ எனத் தெரியவில்லை. போதிய மாணவர்கள் இங்குள்ள பள்ளியில் படித்தும், பள்ளியைத் தரம் உயர்த்தி தர அலுவலர்கள் முன்வருவதில்லை. இதனால், 8, 10 ஆம் வகுப்புகளோடு மலைவாழ் மாணவர்களின் கல்வி நின்றுவிடுகிறது.
பள்ளி கட்டடம் கட்ட இடம் வழங்கப்பட்டுள்ளது, மாவட்ட கல்வி அலுவலர்கள் ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இந்தப் பள்ளியை தரம் உயர்த்தலாம் என்று அரசு தெரிவித்த பின்பும், இன்னும் நடவடிக்கை இல்லை.
இன்றளவும், அடிப்படை வசதிகளை போராடி வாங்க வேண்டிய நிலையில்தான் திருப்பத்தூர் ஜவ்வாது மலை கிராம மலைவாழ் மக்கள் உள்ளார்கள்.
நெல்லிவாசல் நாடு கிராமங்கள் மற்றும் புங்கம்பட்டு நாடு கிராமங்கள் நெல்லிவாசல் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகவும் தகரகுப்பம் பள்ளி, பெரும்பள்ளி பள்ளிகள் உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தவேண்டும் என அப்பகுதி மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கழுத்தை நெரித்த கூட்டுறவு வங்கிக் கடன்: விவசாயி ரயில் முன் பாய்ந்து தற்கொலை