திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே கணவனை இழந்த பெண்ணின், கணவன் வீட்டார் அடித்து துன்புறுத்தி கொடுமை செய்துள்ளனர். மாமனார், மைத்துனர் கொடுத்த தொல்லையால் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அப்பெண்ணிற்கு திருமணமாகி மூன்றரை வயது உள்ள முதல் இரட்டை ஆண் குழந்தைகள், இரண்டு வயது உள்ள ஒரு பெண் குழந்தை என மூன்று குழந்தைகள் உள்ளனர். சமீபத்தில், திடீரென்று கணவன் இறந்துவிட்டதால் அடுத்து குழந்தைகளை பராமரித்து வளர்க்க வழியில்லாமல் தவித்துக் கொண்டிருந்த அப்பெண்ணை, மாமனார், மைத்துனர் இருவரும் அடித்து துன்புறுத்தி பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததால் திருப்பத்தூர் கிராமிய காவல் துறையில் புகார் அளித்து உள்ளார்.
ஆனால் புகார் குறித்து காவல் துறை நடவடிக்கை எடுப்பதற்குள் அடுத்தடுத்து நடந்த அடிதடி மற்றும் பாலியல் சீண்டலுக்குள் தவித்த பெண், மூன்று குழந்தைகளுடன் மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை நாடியுள்ளார். பின்னர் எல்லைப் பகுதிக்கு உட்பட்ட திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், "என்னுடைய கணவர் இறந்த பிறகு மாமனார் மற்றும் மைத்துனர் ஆகிய இருவரும் எனக்கு பாலியல் சீண்டல் கொடுப்பது மட்டுமல்லாமல் அடித்து துன்புறுத்தி என் கணவருக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம், இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு பவுன் தங்க செயின் ஆகியவற்றை அபகரிக்க நினைக்கின்றனர்.
அவற்றையெல்லாம் மீட்டு கொடுத்து என் மீது பாலியல் சீண்டல் மற்றும் வன்முறையில் ஈடுபட முயன்றவர்கள் மீது காவல் துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க:2 கோயில்களின் பூட்டு உடைப்பு: குன்னூரில் பரபரப்பு!