திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் கசதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் செல்வகுமார் (28), உதயகுமார் (26).
சகோதரர்களான இருவரும், நேற்று (ஜன.1) மாலை அதே பகுதியில் உள்ள சாமண்ணா என்பவரது நிலத்தின் வழியாக சென்று கொண்டிருந்த போது, செல்வகுமார் அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
உடனடியாக அண்ணனை காப்பற்ற உதயகுமார் கிணற்றில் குதித்துள்ளார். இந்நிலையில் செல்வகுமார் கிணற்றில் இருந்து மேலே வந்தார். எனினும், உதயகுமார் மூச்சு திணறி நீரில் மூழ்கியுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கதினர், உடனடியாக ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்தத் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர் உதயகுமாரை மீட்க போராடியுள்ளனர்.
ஆனால் இரவு நெடுநேரம் ஆனதால் போதிய வெளிச்சம் இல்லத்தாலும் மீட்பு பணியில் தோய்வு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுப்பட்ட தீயணைப்பு துறையினர் உதயகுமாரை சடலமாக மீட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதயகுமாருக்கு திருமணம் ஆகி 9 மாத ஆண் குழந்தை உள்ள நிலையில் அவர் இறந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : இப்படி ஒரு அதிசயக் கிணறா? கூட்டம் கூட்டமாக பார்த்துச் செல்லும் மக்கள்