திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு அருகே அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் திருப்பத்தூர் திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் சார்பாக திருக்கோயிலின் ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்தக் ஆலோசனை கூட்டத்தில் திரிபுரசுந்தரி சமேத பரமேஸ்வரர், கஜேந்திர வரதராஜ பெருமாள், கோட்டை தர்வஜா ஆஞ்சநேயர், எல்லை அம்மன் உள்ளிட்ட ஆலயங்களின் சுமார் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 ஏக்கர் சொத்துக்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்றும், அதை மீட்கும் வரை திருப்பத்தூர் திருக்கோயில்கள் மீட்பு இயக்கம் இந்து ஆன்மீகப் பேரவை மற்றும் சிவனடியார் திருக்கூட்டம் தொடர்ந்து போராடும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த தலைவர் ஜெயச்சந்திரன், “இந்து கோயில்களின் சொத்தை மாற்று மதத்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். விழா காலங்களில் கோயிலுக்குச் சென்று வர பெண்கள் அச்சப்படுகிறார்கள். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை கேள்வி கேட்க முடியாமல் இஸ்லாமியர்களை பார்த்து பயப்படுகிறார்கள், அங்கு உள்ளவர்கள் அயோக்கியர்கள் என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.
மேலும் திருக்கோயில்கள் மீட்பு இயக்கத்தின் சார்பாக ஆக்கிரமிப்பு செய்துள்ள கோயில் சொத்துக்களை மீட்கும் வரை மாநிலம் தழுவிய அளவில் போராட நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்றார்.
மேலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைப்பாளராக ஜெய்சங்கர், இணை அமைப்பாளராக சக்தி என்கிற சத்தியநாராயணன், துணை அமைப்பாளர்களாக பிரகாஷ் மற்றும் ரமேஷ் ஆகியோர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டு பாரதிதாசன், ஆனந்தன், முத்துக்குமரன் உள்ளிட்ட பதினாறு பேர் உள்ளடங்கிய குழு அமைக்கப்பட்டன.
இதையும் படிங்க: யாதவர் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் - யாதவ மகா சபை தலைவர்