திருப்பத்தூர்: திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பூரிகாமணிமிட்டா ஊராட்சியில் மொத்தமுள்ள 1,159 நபர்களுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, பிச்சனூர் ஆரம்ப சுகாதார அலுவலர் பாஞ்சாலை தலைமையிலான அலுவலர்கள் 1,158 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தி முடித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த குடியன் (65) என்பவர் மட்டும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்துள்ளார். அப்போது தனக்கு ரத்தக்கொதிப்பு, நீரழிவு உள்ளிட்ட நோய்கள் இருப்பதால், தனது எட்டு பிள்ளைகளின் வாழ்வுக்கு யார் பொறுப்பு என அலுவலர்களிடத்தில் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அத்துடன் பல வருடங்களாக ஒரு ஜாதி சான்றிதழ் கேட்டும் இன்றுவரை கிடைக்கவில்லை, தனக்கு ஒரு வீடு கொடுக்க அரசாங்கம் முன்வரவில்லை என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
சமாதானம் செய்த ஊராட்சி மன்றத் தலைவர்
சம்பவ இடத்தில் இருந்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமசிவம், உயிருக்கு உத்தரவாதம் அளித்து வெள்ளைத் தாளில் கையெழுத்துப் போடுவதுடன் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர நடவடிக்கை எடுப்பதாகவும் குடியனை சமாதானம் செய்தார்.
தற்போது, தடுப்பூசி செலுத்த மறுத்த முதியவர் தொடர்பான காணொலி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அத்துடன் சமயோசிதமாகச் செயல்பட்டு தடுப்பூசி இலக்கை நிறைவேற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் ஒருவர் உயிரிழப்பு, இருவர் படுகாயம்