திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் பேரூராட்சிக்கு உட்பட்ட கொட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகன் சந்தோஷ். இவர் கல்லூரி படிக்கும்போது, நடுப்பட்டறையைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஒரு ஆண்டுக்கு முன்பு, அப்பெண்ணை வீட்டுக்குத் தெரியாமல் சந்தோஷ் திருமணம் செய்துள்ளார்.
ஆனால், சந்தோஷ் திருமணம் செய்து கொண்ட பெண் வேறு சாதியைச் சேர்ந்தவர் என்பதால், சந்தோஷின் பெற்றோர் இந்த காதல் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் சந்தோஷின் திருமணத்தை அவரது பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கொட்டாவூரில் மகன் சந்தோஷ் மற்றும் மருமகளுடன் ஜெகதீசன் குடும்பத்தினர் ஒன்றாக வசித்து வந்தனர்.
இந்த நிலையில் கொட்டாவூர் கிராம மக்கள், ஜெகதீசன் மற்றும் அவரது உறவினர்களான 4 குடும்பத்தைச் சேர்ந்தவர்களை, வேறு சாதி பெண்ணைத் திருமணம் செய்தது மட்டுமல்லாமல், அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து ஊர் கட்டுப்பாட்டை மீறியதாக குற்றம் சாட்டினர். இதனையடுத்து நடைபெற்ற ஊர் கூட்டத்தில், 4 குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக கூறியுள்ளனர்.
இந்த முடிவின் அடிப்படையில், ஜெகதீசன் குடும்பத்தினர் உள்பட 4 குடும்பத்தினரும், ஊர் திருவிழாவில் பங்கேற்கக் கூடாது என்று தெரிவித்துள்ளனர். இதனிடையே ஜெகதீசன் குடும்பத்தினர் சார்பில் கோயிலில் பூஜைக்காக வைத்த பொருட்களை ஊர் மக்கள் தூக்கி வீசி உள்ளதாக தெரிகிறது. அது மட்டுமல்லாமல், ஊரில் யார் உயிரிழந்தாலும், அது தொடர்பான துக்க நிகழ்விலும் பங்கேற்கக் கூடாது எனவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
இதனிடையே ஜெகதீசன் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் அக்கிராம மக்களில் சிலர், சாதி ரீதியாக பேசி அவ்வப்போது வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று (மார்ச் 3) இரவு ஜெகதீசன், தனது இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் பகுதியில் இருந்து கொட்டாவூருக்கு வந்துள்ளார்.
அப்போது கொட்டாவூர் கிராம மக்கள் சிலர், ஜெகதீசனிடம் மீண்டும் சாதி ரீதியான வார்த்தைகளை கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜெகதீசனை சரமாரியாக தாக்கிய கிராம மக்கள், அவரது இருசக்கர வாகனத்தையும் சேதப்படுத்தி உள்ளனர். அதேநேரம் ஜெகதீசன் உடன் இருந்த அவரது உறவினரான பாலு என்ற இளைஞரையும் கிராம மக்கள் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த ஜெகதீசன் மற்றும் பாலு ஆகிய இருவரும் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே இது குறித்து தகவல் அறிந்த ஆலங்காயம் காவல் துறையினர், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: டெல்லி பெண்ணுக்கு பாலியல் தொல்லை; சாகும்வரை ஆயுள் தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்