திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கொல்லகொட்டாய் என்ற பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தி என்பவருக்குச் சொந்தமான வீடு பல நாட்களாக பூட்டப்பட்டிருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணமூர்த்தியின் பூட்டிய வீட்டில் செம்மரக் கட்டைகள் பதுக்கி வைத்து இருப்பதாக அப்பகுதி மக்கள் ஆம்பூர் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர்.
செம்மரக்கட்டைகள் பறிமுதல்: இந்தத் தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினரின் கொல்லகொட்டாய் பகுதியில் உள்ள கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு விரைந்தனர். பின்னர், பூட்டியிருந்த அவரது வீட்டிற்குள் செம்மரக்கட்டைகள் இருந்ததை வனத்துறையினர் உறுதி செய்தனர்.
வீட்டின் உரிமையாளருக்கு வலைவீச்சு: இதனைத்தொடர்ந்து ஆம்பூர் நகர காவல் துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் உதவியுடன் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் பதுக்கி வைத்து இருந்த, சுமார் ஒரு டன் அளவிலான செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், செம்மரக்கட்டைகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வீட்டின் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தியை வனத்துறையினர், தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.
தடுப்பணையில் மூழ்கி சிறுமி உயிரிழப்பு: இது அவ்வாறு இருக்க, வாணியம்பாடி அருகே கோயிலுக்குச் சாமி கும்பிடச் சென்ற 8 வயது சிறுமி தடுப்பணையில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர், முத்துவேல். இவர் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திரா எல்லைப்பகுதியான புல்லூர் தடுப்பணை (The Pullur dam) பகுதியில் உள்ள கனகநாச்சியம்மன் கோயிலுக்கு குடும்பத்துடன் சாமி கும்பிடச் சென்றுள்ளார்.
பின்னர் கோயில் அருகில் உள்ள தடுப்பணையில் குடும்பத்தினருடன் குளிக்கச் சென்றபோது, தடுப்பணையில் இவரது மகள் பத்மஜா(8) தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். இதனைக்கண்ட அக்குடும்பத்தினர் கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்க முயன்றுள்ளனர். ஆனால், தடுப்பணையில் விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
தடுப்பணையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அமைக்கக் கோரிக்கை: இது தொடர்பாக, பொதுமக்கள் குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில் அங்கு விரைந்த குப்பம் போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சிறுமியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அருகிலுள்ள வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல, கடந்த 23ஆம் தேதி பாலாறு தடுப்பணையில் மூழ்கி இளைஞர் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்த சோகம் அடங்குவதற்குள் மேலும் ஒரு சம்பவம் நடைபெற்றிருப்பது அப்பகுதியினரை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இவ்வாறு அப்பகுதியில் ஏற்படும் தொடரும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கு, தடுப்பணைகளை சுற்றிலும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தருமாறு அப்பகுதியினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: Neithal Kodai Vizha: கடலூர் சில்வர் பீச்சில் துவங்கியது நெய்தல் கோடை விழா; பொதுமக்கள் உற்சாகம்!