திருப்பத்தூர் தொகுதி பாமக வேட்பாளர் டி.கே. ராஜா இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், "நான் வெற்றி பெற்றால் மீண்டும் ஜோலார்பேட்டையிலிருந்து திருப்பத்தூருக்கு ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் வருவதற்கு வழி வகை செய்து தருவேன். குடிநீர், தெருவிளக்கு, கழிவுநீர் கால்வாய் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தருவேன்.
அது மட்டுமின்றி தொழிற்பேட்டை அமைத்து வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவேன். திருப்பத்தூர் சுற்றுவட்ட பகுதிகளில் பூக்கள் விளைச்சல் அதிகம் என்பதால் மலர்களைக் கொண்டு வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து தருவேன். ஒவ்வொரு வீட்டிற்கும் தங்கு தடையின்றி காவிரி கூட்டுக் குடிநீர் இணைப்புகள் வழங்க பாடுபடுவேன்.
நான் பத்து ஆண்டு காலத்திற்கு முன்பு இந்த திருப்பத்தூர் தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தபோது, மூன்று ரயில்வே மேம்பாலங்கள் அமைத்துள்ளேன். அதுமட்டுமின்றி ஆங்காங்கே பெரிய பெரிய நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தி உள்ளேன்" என்று தெரிவித்தார்.