திருப்பத்தூர் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தருமபுரி மண்டலம் திருப்பத்தூர் பணிமனையில் சிஐடியூ (CITU) தொழிற்சங்க நிர்வாகிகள் தொழிற்சங்கத்தின் கட்சி கொடியேற்றம் மற்றும் பெயர் பலகை ஆகியவற்றை புதுப்பித்து விழா நடத்தி உள்ளனர்.
இதற்கிடையே திருப்பத்தூர் பணிமனையில் திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து கிளை மேலாளர் ஆசைலிங்கம் என்பவர் பல்வேறு ஊழல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
தொடர்ந்து, ஆசைலிங்கம் தனியார் பேருந்துகளில் லஞ்சம் பெற்று கொண்டு அரசு போக்குவரத்திற்கு கடும் நஷ்டம் ஏற்படுத்தி வருவதாக அந்த விழாவில் சிஐடியூ உறுப்பினர்கள் பேசியுள்ளனர்.
இந்த நிலையில், சிஐடியூ (CITU) தொழிற்சங்கத்தின் திருப்பத்தூர் பணிமனை தலைவர் சுதாகர் மற்றும் செயலாளர் முகந்தன் ஆகியோர் நேற்று (ஜன.1) அதிகாலை வழக்கம்போல் பணிக்கு வந்துள்ளனர்.
ஆனால் கிளை மேலாளர் ஆசைலிங்கம் அவர்களுக்கு பணி வழங்காமல் விடுமுறை அளித்து காரணமே இல்லாமல் பணியிட நீக்கம் செய்வதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிற்சங்கத்தினர் கிளை மேலாளரை கண்டித்தும், அவருக்கு துணை போகும் தமிழ்நாடு அரசின் அராஜக போக்கை கண்டித்தும் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் பணிமனையில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையும் படிங்க : அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது அதிகரிப்பு: சிஐடியூ எதிர்ப்பு!