செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன். இவர், தனது மனைவி, இரண்டு பிள்ளைகளுடன் ஓசூருவிலுள்ள உறவினர் நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள சென்றனர்.
பின்னர், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி சுங்கச்சாவடி பகுதியில் ஓசூருவிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தனர்.
அப்போது, பேருந்திலிருந்த மூன்று பெண்கள் ஹரிகிருஷ்ணன் குடும்பத்தினருடன் பேச்சு கொடுப்பதுபோல் பையில் வைத்திருந்த 3.5 சவரன் நகைகளை கொள்ளையடித்து தப்பிக்க முயன்றனர்.
இதில், சுதாரித்துக்கொண்ட அவர்கள், கூச்சலிட்டதையடுத்து பேருந்திலிருந்த சக பயணிகள், சுங்கச்சாவடி பணியாளர்கள் அப்பெண்களை பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து, அவர்கள் காவல் துறையினரிடமிருந்து தப்ப முயன்றபோது அவர்களை காவல் துறையினர் விரட்டிப்பிடித்தனர். இதில், காவலர் கல்பனா என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
மேலும், அப்பெண்கள் மூவரையும் கைதுசெய்த அம்பலூர் காவல் துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில், அப்பெண்கள் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவியா, பாரதி, சுனிதா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களிடமிருந்து 3.5 சவரன் தங்க நகையை பறிமுதல்செய்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து, இவர்கள் வேறேதேனும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.