திருப்பத்தூர் மாவட்டத்தில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவு என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பரப்புரை வாகனங்களை மாவட்டத் தேர்தல் அலுவலர் சிவனருள் இன்று (மார்ச் 20) தொடங்கிவைத்தார். அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு கையுறை, கிருமிநாசினி வழங்கப்படும். அதுமட்டுமல்லாது அவர்களது உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்படும். இதற்காக உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தொடர்ந்து கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். அவர்களுக்குப் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். தனி மனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
அரசியல் கட்சியினர் கட்சி கூட்டங்களில் கலந்துகொள்ளவரும் மக்களிடம் முகக்கவசம் அணிய வலியுறுத்த வேண்டும். முன்களப் பணியாளர்கள், தேர்தலில் ஈடுபடும் பணியாளர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 1,371 வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
வரும் தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 10 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கும் அஞ்சல் மூலம் வாக்களிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் அஞ்சல் வாக்குகளை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் கண்டிப்பாக அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகப் பல்வேறு விழிப்புணர்வு செய்யப்பட்டுவருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி முதல் தேர்தல் என்பதால் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டிருக்கிறது" எனத் தெரிவித்தார்.