திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் மேல்சாணங்குப்பம் பகுதியில் பல ஆண்டுகளாக இலங்கைத் தமிழர்கள் தங்களுக்காக அளிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கைத் தமிழர்களுக்கு மேல்சாணங்குப்பம் ஏரிப்பகுதியில் குடியிருப்பு கட்ட மாற்று இடத்திற்கான பட்டாவை பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு வழங்கினார். இதனைத் தொடர்ந்து இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்ட இடம் மேல்சாணங்குப்பம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேறும் முக்கிய பகுதி எனவும், அங்கு வீடுகட்டினால், உபரி நீர் ஊருக்குள் புகும் அபாயம் உள்ளது என்றும் அவ்வூர் கிராம மக்கள் கூறுகின்றனர்.
உபரிநீர் ஊருக்குள் புகும் அபாயம்
மேலும், சில ஆண்டுகளுக்கு முன் ஏரி உபரி நீர் ஊருக்குள் புகுந்து மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மறுபடியும் அது போல் நிகழ்வு ஏற்படாமல் தடுக்க அவர்களுக்கு மாற்று இடம் அளிக்க வேண்டும்.
![இலங்கை தமிழர்களுக்கு வேறு இடம் கொடுங்கள்- கிராம மக்கள் மறியல் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tpt-02-people-road-stroke-vis-scr-pic-tn10018_01022022113948_0102f_1643695788_359.jpg)
இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் மேல்சாணங்குப்பம் கிராம மக்கள் வாணியம்பாடி - ஆம்பூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
பின்னர் ஆம்பூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் பொது மக்கள் மறியலைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு