திருப்பத்தூர்: ஆம்பூர் பெத்லகேம் பகுதியில் அமைந்துள்ளது, நகராட்சி நடுநிலைப் பள்ளி. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளி இயங்கி வரும் பள்ளியில் ஏறத்தாழ 350 மாணவ, மாணவியர்கள் பயின்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சரவணன் என்பவர் பணியாற்றி வருகிறார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஈடாக அரசுப்பள்ளி மாணவர்களும் ஆங்கில மொழியில் புலமை பெற வேண்டும் என்ற லட்சியத் திட்டத்தை கொண்ட அவர், அதற்கானப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
தன்னுடைய சொந்த முயற்சியில் ஏறத்தாழ 50 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஐ-பேட், ஆங்கில எழுத்துகளை கொண்ட ஸ்மார்ட் பலகை, உலக உருண்டை மற்றும் ஒலி பெருக்கி ஆகியவற்றை வாங்கிய ஆசிரியர் சரவணன், அதன் மூலம் தொழில் நுட்பத்துடன் கூடிய செயலிகளைக் கொண்டு மாணவர்களுக்குப் பாடம் கற்பித்து வருகிறார்.
உலகில் உள்ள சிறப்பு வாய்ந்த இடங்கள், விலங்குகள் மற்றும் தொழில் நுட்பங்களை எளிதான முறையில் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர் சரவணன் கற்றுக்கொடுத்து வருகிறார். மேலும் ஐ-பேடில் உள்ள செயலிகள் மூலம் ஆங்கில வாக்கியங்களை மாணவர்கள் எளிதாக கற்று வருகின்றனர்.
இந்த ஸ்மார்ட் வகுப்புகள் மூலம் அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்நுட்பத்துடன் கூடிய ஆங்கிலத்தை எளிதாக கற்றுக்கொள்வதாக ஆசிரியர் சரவணன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமையை வழங்கி வரும் ஆசிரியரின் முயற்சி, பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க:Thunivu: துணிவு ரிலீஸ் கொண்டாட்டம் - லாரியில் இருந்து தவறி விழுந்து அஜித் ரசிகர் பலி