சென்னை: திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா. சென்னை யானைகவுனி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றிவருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவரக்கூடிய ஜெயந்திரேன் என்பவருடன் விஷ்ணுபிரியாவுக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் ஒன்பது மாத கர்ப்பிணியாக இருக்கக்கூடிய விஷ்ணு பிரியா சொந்த ஊருக்குப் பயணம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரக்குமார் தலைமையில் காவல் நிலையத்திலேயே வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த காவல் துறையினர் ஏற்பாடுகள் செய்தனர்.
இதனையடுத்து நேற்று (நவம்பர் 22) தேங்காய், பழம் உள்பட 15 சீர்வரிசை தட்டுகள், ஐந்து வகையான உணவுகளுடன் யானைகவுனி காவல் ஆய்வாளர் வீரக்குமார், உதவி ஆய்வாளர்கள், காவலர்கள் இணைந்து யானைகவுனி காவல் நிலையத்திலேயே விஷ்ணு பிரியாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடத்தினர்.
அதன்பின் காவல் நிலையத்திலேயே காவல் துறையினரே உணவு சமைத்து விஷ்ணுபிரியாவுக்குப் பரிமாறினர். அனைத்து காவலர்களுக்கும் பரிமாறப்பட்டது.
எங்க வீட்டு பெண்ணுக்கு எப்படி வளைகாப்பு செய்வோமோ, அதேபோல காவலருக்கு வளைகாப்பு செய்தோம் என யானைகவுனி காவல் துறையினர் பூரிப்புடன் தெரிவித்தனர். காவல் நிலையத்தில் சொந்தபந்தங்கள்போல காவலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வளைகாப்பு நடத்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும், இந்த நிகழ்ச்சி அறிந்து அருகில் உள்ள மற்ற காவல் நிலையங்களிலிருந்தும் காவல் துறையினர் வந்து காவலர் விஷ்ணுபிரியாவை வாழ்த்திச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Rowdy baby surya-வைக் கைது செய்... இளம்பெண் குமுறல்