திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகர காவல் நிலையத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழாவையொட்டி காவல் நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழாவினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தொடங்கிவைத்தார்.
பின்னர் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் நடைபெற்ற கிராம பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், “கிராமங்களில் நடைபெறும் கள்ளச்சாராயம், மணல் திருட்டு, போதைப் பொருள்கள் விற்பனை, உள்ளிட்ட சமூகவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வருபவர்களை அந்தந்த பகுதிகளில் கண்டறிந்து அவர்களையும் காவல்துறை மற்றும் சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மேலும் வெளியில் செல்லும்போது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்” என அறிவுரை வழங்கினார்.
இதையும் படிங்க: முதலமைச்சருக்கு தலைமை செயலக சங்கம் கோரிக்கை!