திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு அடுத்த வடுகம்முத்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (32). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும் 3 வயது குழந்தையும் உள்ளனர். சீனிவாசன், அதே பகுதியில் குடிசை அமைத்து காளியம்மன் கோயில் ஒன்றை கட்டி வாக்கு சொல்லி வருகிறார். அதுமட்டுமன்றி அதே பகுதியில் குடிநீர் டேங்க் ஆபரேட்டராகவும் பணிபுரிந்துவருகிறார். இவரது மனைவி லட்சுமி கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக வாணியம்பாடி பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சீனிவாசனிடம் பல பகுதியிலிருந்து பொதுமக்கள் அருள்வாக்கு கேட்கவும் மாந்திரீகம் செய்யவும் கூட்டமாக அலை மோதுவது உண்டு. இதனிடையே, நேற்று(பிப்.11) தை அமாவாசை அன்று பொதுமக்கள் கூட்டமாக வந்து அருள்வாக்கு கேட்டு சென்றுள்ளனர். இதையடுத்து, சீனிவாசன் நள்ளிரவு பூஜையை முடித்துக்கொண்டு திரும்பும்போது கோயில் அருகாமையில் அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக தாக்கியதில் தலை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.
பின்னர், விடியற்காலை அப்பகுதியில் செல்லும் பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சீனிவாசனை கண்டு அதிர்ச்சியடைந்து குரிசிலாப்பட்டு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அழுகிய நிலையில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை!