திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கரோனா பிரிவிற்கான படுக்கையறைகள் அமைக்கும் பணி இஸ்லாமியா மகளிர் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. அப்பணிகளை வேலூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்ரமணியம், வட்டாட்சியர் சிவ பிரகாசம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சிவன் அருள், "டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் 36 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். அதில், 14 பேர் டெல்லியில் இருந்து இன்னும் திரும்பவில்லை. மீதமுள்ள 22 பேர் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களை பரிசோதித்து, ரத்த மாதிரிகள் மருத்துவ ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. அதன் முடிவிற்காக காத்திருக்கிறோம். விமான நிலையங்களில் இருந்தும் பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரிலும் இதுவரை மொத்தமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் 818 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு கரோனா தொற்றிற்கான எந்த அறிகுறியும் இல்லை. அவர்கள் நலமாக உள்ளனர்.
இருந்தாலும் அவர்களை சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த்துறையின் மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். மாவட்ட ஆட்சியரின் தன்னார்வலர் குழு மற்றும் வட்டாட்சியர்கள் ஆகியோர் இணைந்து ரயில் நிலையம், பேருந்து நிலையம் என பல இடங்களில் ஆதரவற்று உள்ளவர்களுக்கு உணவு, இருப்பிடம் என அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்.
கரோனா தனிப்பிரிவிற்கு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி, ஆம்பூர், நாற்றம்பள்ளி உள்ளிட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 285 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
மேலும், அரசு, தனியார் கல்லூரி மற்றும் இதர கட்டடங்களில் 580 படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெறுகிறது. சிகிச்சை அளிக்க இந்தியன் மெடிக்கல் அசோசியேஷனை அழைத்து பேசியுள்ளோம். அவர்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளனர். மருந்தகங்கள், தனியார், மருத்துவமனைகளில் மருத்துவக் குழு மூலம் கண்காணித்து கணக்கெடுத்து வருகிறோம்.
அதில், சளி, இருமல் என்று யார் வந்தாலும் அவர்களை அடையாளம் காணப்பட்டு முழுவதும் கண்காணித்து வருகிறோம். திருப்பத்தூர் மாவட்ட மக்கள் முழுவதும் இந்த ஊரடங்கு உத்தரவிற்கு முழு ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்து வருகின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: 'டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் தாமாக முன்வர வேண்டும்' - தமிழ்நாடு அரசு வேண்டுகொள்