திருப்பத்தூர்: கந்திலி அடுத்த கொண்டநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் நரசிம்மன் (30). மாம்பழ விதை விற்பனை செய்யும் இவர், அதே பகுதியைச் சேர்ந்த ராஜா(60) என்பவரின் இரண்டாவது மனைவியின் மகளான அனிதாவை, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், ராஜா தனக்கு சொந்தமான சொத்தை, மற்றொரு நபருக்கு விற்று விட்டதாக தெரிகிறது. இதனையடுத்து நரசிம்மன், தனது மாமனார் விற்ற அதே சொத்தை ரூ. 45 லட்சத்திற்கு விலைக்கு வாங்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த ராஜா, சொத்தை தனது பெயரில் எழுதி வைக்குமாறு பலமுறை நரசிம்மனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மருமகனைக் கொலை செய்ய முடிவு
சொத்து கிடைக்காத கோபத்தில், நரசிம்மன் குடும்பத்தையே முழுவதுமாக ஒழித்துக் கட்ட ராஜா, அவரது முதல் மனைவியின் மகன்களான யுவராஜ், கார்த்திக் ஆகியோர் முடிவு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து விடியற்காலை 3 மணியளவில் நரசிம்மன் வீட்டு சமையலறையில், சுமார் 20 ஜெலட்டின்குச்சிகள் அடங்கிய நாட்டு வெடிகுண்டை வைத்து, 500 மீட்டர் தொலைவில் உள்ள மின்கம்பத்தில் இணைத்து வெடிவிபத்தை நிகழ்த்த ராஜா உள்ளிட்டோர் முயற்சித்துள்ளனர்.
அப்போது, வீட்டின் வெளியே படுத்திருந்த நரசிம்மனின் தந்தை, சலசலப்பு சத்தம் கேட்பதை அறிந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, சமையலறையில் நாட்டு வெடிகுண்டுகள் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு நரசிம்மனின் தந்தை கூச்சலிட்டுள்ளார்.
நாட்டு வெடிகுண்டு பத்திரமாக மீட்பு
இதனால் பயந்து போன யுவராஜ், கார்த்திக் ஆகிய இருவரும், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். பின்னர், இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சமையலறையில் கட்டப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டை பத்திரமாக மீட்டனர்.
மேலும், நாட்டு வெடிகுண்டை வெடிக்க வைக்க முயன்று தப்பியோடியோரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். சொத்து பிரச்னை காரணமாக, சொந்த மருமகனையே மாமனார் நாட்டு வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பப்ஜி மதன் மீதான குண்டர் சட்டம் உறுதி - அறிவுரை கழகம் உத்தரவு