திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த கெஜல்நாயக்கன்பட்டியில் ரெயின்போ ஸ்கூல் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை மாணவர்கள் பயின்று வருகின்றனர். புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் - மாதம்மாள் தம்பதியரின் மகள் (7) இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு பயின்று வந்தார்.
இந்நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த குழந்தை, மாலை மயக்கமடைந்து திடீரென கீழே சுருண்டு விழுந்துள்ளார். இதனையறிந்த ஆசிரியர்கள், குழந்தையை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் முகத்தில் சிறு காயம் இருந்ததாலும், அதே பள்ளியில் சிலர் பள்ளி மாடியிலிருந்து பிரியதர்ஷினி கீழே விழுந்து இறந்து விட்டார் என்று பெற்றோர்களுக்கு தெரிவித்ததாலும், சந்தேகமடைந்த பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இன்று 300க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் வழியாக கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் பள்ளி நிர்வாகத்தின் மீதும், குழந்தை இறப்பிற்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனையறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அதிகாரமாக பொதுமக்களை மிரட்டியதால் அவர்களது வாகனம் முற்றுகையிடப்பட்டு, இரு தரப்புக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இச்சம்பவத்தினால் அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.