திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மலைவாழ் மக்கள் காலம் காலமாக கோடை காலத்தில் விழா நடத்துவது வழக்கம். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருவார்கள். அத்தகைய விழாவுக்கு நிரந்தர விழா மேடை அமைத்து தரும்படி நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில், 16,000 சதுர அடியில் 2000 பேர் அமரும் வகையில் ரூ. 2.81 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர விழா மேடை அமைக்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் சிவனருள் தலைமையில் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை அமைச்சர் கே.சி. வீரமணி தொடக்கி வைத்தார்.
முன்னதாக, நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியதற்காக, மலைவாழ் மக்கள் தாரை தப்பட்டை முழங்க தங்கள் பாரம்பரிய நடனத்தை அரங்கேற்றி அமைச்சரை வரவேற்றனர். நிரந்தர விழா மேடை இல்லை என்பதற்காகவே காலம் காலமாக மலைவாழ் மக்கள் கொண்டாடி வந்த கோடை விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.