திருப்பத்தூர்: அடுத்த 4 நாட்களுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு - ஆந்திரா நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆம்பூர் அடுத்த பச்சகுப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலம் முற்றிலும் மூழ்கியுள்ளது. எனவே ஆற்றின் இரு கரைகளிலும் காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு, ஆம்பூரிலிருந்து குடியாத்தம் மற்றும் குடியாத்தத்திலிருந்து ஆம்பூர் செல்லக்கூடிய வாகனங்களுக்குப் போக்குவரத்து தடை விதித்து தடுப்பு வேலிகள் அமைத்திருந்தனர்.
ஆனால் தடுப்பு வேலிகள் வெள்ளப்பெருக்கினால் முற்றிலுமாக ஆற்றில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது. இருப்பினும் ஆபத்தை உணராத பொதுமக்கள், தரைப்பாலத்தினை கடந்து சென்று வருகின்றனர். மேலும் இந்த ஆண்டில் 5வது முறையாகத் தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்திலிருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு