திருப்பத்தூர்: காட்பாடி அருகேயுள்ள மேல்பாடி காவல் நிலையம் முன்பாக கடந்த மாதம் 11 ஆம் தேதி சரத் என்ற இளைஞர் தன்னை காவல் துறையினர் பணம் கேட்டு தொந்தரவு செய்வதாக கூறி, தன் சாவிற்கு காரணம் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தான் எனக் கூறி தீக்குளித்தார். பின்பு அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனையடுத்து மேல்பாடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றிய கார்த்திகேயன் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று மேல்பாடி, வள்ளிமலை, பெருமாள்குப்பம், சோமநாதபுரம், பெரிய கீசகுப்பம் உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள், மேல்பாடி காவல்நிலைய உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் நியாயமாக நடக்கக் கூடியவர் எனவும்; கிராம மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்தவர் எனவும்; மேலும் கிராமங்களில் கண்காணிப்பு கேமரா வசதி உள்ளிட்டவைகளை ஏற்படுத்தியவர் எனவும் கூறி,
அவருக்கும் இளைஞர் தற்கொலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை எனவே உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து மீண்டும் அவரை மேல்பாடி காவல்நிலையத்திலேயே பணியமர்த்தக்கோரி கிராம மக்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: 'அரசு புறம்போக்கு, நீர்நிலைகளில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா - மாவட்ட ஆட்சிய அலுவலகம் முற்றுகை