திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் ரயில்வேக்கு சொந்தமான சுரங்கப் பாதை அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த சில தினங்களாகப் பெய்த கனமழையின் காரணமாக இங்கு உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி உள்ளது.
மேலும் ஜீவநந்தபுரம், எலவம்பட்டி, திப்பன்னன் வட்டம், மௌளகரம்பட்டி, ஆலமத்து வட்டம் மற்றும் செல்லரப்பட்டி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து நாள்தோறும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த சுரங்கப் பாதையின் வழியாகத்தான் சென்று வருகின்றனர். இதுமட்டும் அல்லாது குனிச்சி பகுதியில் உள்ள தனியார்ப் பள்ளி மற்றும் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு இந்த பகுதிகளிலிருந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகளும் சென்று வருகின்றனர்.
இந்த சுரங்கப் பாதையில் அதிக அளவிலான தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளி மாணவர்கள் சென்று வர மிகவும் அவதியுற்று வருகின்றனர். இதன் காரணமாகச் சுரங்கப் பாதையின் மீது உள்ள ரயில்வே தண்டவாளத்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் தினம் தோறும் கடந்து சென்று வருகின்றனர்.
இது குறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் ரயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், உயிர் சேதம் எதுவும் நடைபெறும் முன்னர் பள்ளி மாணவர்களின் நலன் கருதி இந்த சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், இந்த சுரங்கப் பாதையின் மீது பம்பு அறை இருந்தும் ரயில்வே துறை ஊழியர்கள் சுரங்கப் பாதையில் தேங்கி நிற்கும் மழை நீரை முறையாக அப்புறப்படுத்தாமல் மெத்தனப் போக்காக செயல்படுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: டெண்டர் போட வந்த பாஜகவினரை வழிமறித்து திமுகவினர் ரகளை... மாவட்ட ஆட்சியர் எடுத்த அதிரடி முடிவு!