திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே அக்ரகாரம் பகுதியில், கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சித்த மருத்துவத்தில் சிகிச்சை அளிக்க, சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை அமைச்சர் கே.சி. வீரமணி இன்று(ஜூலை 16) தொடங்கிவைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் கே.சி.வீரமணி, 'இயற்கையான முறையில் மூலிகை தோட்டங்களுடன் சிறப்பு சிகிச்சை சித்த மருத்துவமனை தொடங்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நம் முன்னோர்கள் 100 ஆண்டுகளுக்கு முன்பு, சித்தர்கள் கூறிய உணவு முறைகளையும் சிகிச்சை முறைகளையும் கையாண்டனர். ஆனால், காலப்போக்கில் அவை மாறிவிட்டன. இருந்தபோதிலும் அதனை மீண்டும் நடைமுறைப்படுத்த தற்போது சிறப்பு சிகிச்சை சித்த மருத்துவப் பிரிவு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பிரதமரும் தமிழ்நாடு முதலமைச்சரும் எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், இன்று மாநிலத்தில் கரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மட்டும் கரோனா அறிகுறி தென்பட்ட 25 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஆரம்ப காலங்களில் குறைவான அளவிலேயே வைரஸ் தொற்று இருந்தது. அதன் பிறகு சென்னையில் இருந்து வந்த நபர்களால் தான், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் வைரஸ் தொற்று அதிகமாகி விட்டது.
இருந்தபோதிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் அலோபதி முறையில் கரோனா வைரஸ் நோயாளிகள் குணமாக்கப்படுகிறார்களா அல்லது சித்த வைத்திய முறையில் குணமாக்கப்படுகிறார்களா என்ற போட்டி மனப்பான்மையுடன் மருத்துவர்கள் செயல்பட்டு வருவது மிகுந்த வரவேற்பு அளிக்கக் கூடிய வகையில் இருக்கிறது' என அமைச்சர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.