சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் நடுவே 20 கி.மீ. தூரம் கொண்ட திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆம்பூர் - வாணியம்பாடி நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த நெடுஞ்சாலையில் விண்ணமங்கலம், மாராப்பட்டு, மின்னூர் ஆகிய பகுதிகளில் ஆள்கள் நடமாட்டம் சற்று குறைவாகவே இருக்கும். இதனைப் பயன்படுத்திக்கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள் அவ்வழியாக வரும் வாகனங்களை மறித்து செல்போன், பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து வந்துள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். ஆனால், பல மாதங்களாகியும் வழிப்பறி கொள்ளையர்களை காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
மேலும், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக். 18) பிற்பகல் 2 மணியளவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற நபரின் செல்போன், அடையாளம் தெரியாத நபர்களால் பறிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இவ்விவகாரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில், உடனடியாக வழிப்பறியில் ஈடுபடும் கும்பலைப் பிடிக்க ஆம்பூர், வாணியம்பாடி கிராமிய காவல் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதனால் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்ட காவல் துறையினர் வாணியம்பாடி பகுதியில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் சுற்றித்திரிந்த இளைஞர்களைப் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், ஆம்பூர் மேல்மிட்டாளம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், ஆம்பூர் பெரிய வெங்கடசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த சுதாகர் ஆகியோர் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களிடம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக அவர்கள் இருவரையும் கைதுசெய்த வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.