திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த மேட்டுப்பாளையத்தில் உள்ள பாலாற்றின் கரையோரம் உள்ள பகுதி மயானமாகும். இந்த மயானம் மேட்டுப்பாளையம், இந்திராநகர் உட்பட 5 வார்டுகளை சேர்ந்தவர்களுக்கு உரிமையானதாகும்.
மணல் கொள்ளையர்களுக்கு பாலாறும் விதிவிலக்கல்ல. பல ஆண்டுகளாக இந்த பகுதியில் தொடர் மணல் திருட்டு நடந்த வண்ணம் இருக்கிறது. இதை தடுப்பதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தாலும் அவர்கள் கண்ணில் மண்ணை தூவி விட்டு இந்த சம்பவம் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது.
பாலாற்றை தோண்டி தோண்டி பள்ளம் செய்ததோடு விட்டு விடாமல், பக்கத்தில் இருக்கும் மயானத்திலும் கை வைத்து விட்டனர் மணல் கொள்ளையர்கள். பிணங்கள் புதைக்கப்பட்ட இடங்களை தோண்டி மணல் அள்ளுவதால் மண்ணுக்குள் அகப்பட்டிருந்ந்த பிணத்தின் எலும்புகள் வெளியே தெரிகின்றன.
இதை மோப்பம் பிடித்த நாய்கள், எலும்புகளை கவ்விக்கொண்டு சாலையில் சுற்றித்திரிகிறது. இதனால் அப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.