தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6,9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது.
இதில் ஆலங்காயம் ஒன்றியத்தில் திமுக சார்பில் போட்டியிட்ட 11 பேரும், அதிமுக சார்பில் 4 பேரும், பாமக சார்பில் 2 பேரும், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் என 18 பேர் ஒன்றிய குழு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர்.
வெற்றிபெற்ற ஒன்றியக் குழு உறுப்பினர்களுக்கு பதவியேற்கும் விழா அக்டோபர் 20 தேதி ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
விழா முடிந்து வெளியே வந்த திமுகவை சேர்ந்த 11 ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு தலைவர் பதவியை கைப்பற்ற வேட்பாளர்களை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது திமுக இரு கோஷ்டியினராக பிரிந்து அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் கைகலப்பு நடைபெற்றது.
இதைப் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் பார்த்து அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
இந்நிலையில் இன்று (அக்.22) ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவர் தேர்ந்தெடுக்க 18 ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கான மறைமுக தேர்தல் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது.
தேர்தலில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 300 காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
மேலும் தேர்தல் நடக்கும் பகுதிக்கு 18 ஒன்றியக்குழு உறுப்பினர்கள், அலுவலர்கள் மட்டுமே காவல்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர்அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
தேர்தல் காரணமாக ஆலங்காயம் பகுதிகளில் உள்ள சில கடைகளை திறக்க காவல்துறையினரின் அனுமதி மறுத்துள்ளனர். மேலும் மூன்று கிலோ மீட்டருக்கு பொது போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திமுகவினர் கோஷ்டி மோதல்; காவல்துறையினர் தடியடி!