திருப்பத்தூர்: ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட 14, 20 மற்றும் 21ஆவது வார்டு பகுதியில் 87 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலைகள் மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் 90 சதவீதம் நிறைவு பெற்று கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இன்று திடீரென ஆம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கன மழையால், கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
ஏற்கனவே, கழிவு நீர் கால்வாய்கள் மற்றும் சாலை அமைக்கும் பணிகளுக்காக பள்ளங்கள் தோண்டப்பட்டு சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். தற்போது புதியதாக அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்களும் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால், வீடுகளுக்குள் செல்ல வழி இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
தற்போது பெய்த சாதாரண கனமழைக்கு தாங்காத அளவில், தரமற்ற முறையில் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளதாகவும், தரமற்ற பணிகளை செய்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மழை நீரில் அடித்துச் செல்லப்பட்ட கால்வாய் கட்டுமான இடிபாடுகளை சரி செய்ய வந்த நகராட்சிக்கு சொந்தமான ஜேசிபி எந்திரத்தை பொதுமக்கள் சிறை பிடித்தனர். அதிகாரிகளிடம் வாக்குவாதி ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் குற்றங்கள் - பயணிகளை அலைக்கழிக்கக் கூடாது என அறிவுரை..!