41 ஆண்டுகளுக்கு முன் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் நக்சலைட் சிவலிங்கம் என்பவரைப் பிடித்து ஜீப்பில் அழைத்துச் சென்றபோது, சிவலிங்கம் மறைத்துவைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இந்தச் சம்பவத்தில் ஜீப்பில் இருந்த காவல் ஆய்வாளர் பழனிச்சாமி, தலைமைக் காவலர் ஆதிகேசவேலு, காவலர்கள் யேசுதாஸ், முருகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
வீரமரணம் அடைந்த நான்கு காவலர்களுக்கும் ஆண்டுதோறும் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டுவருகிறது.
இந்தநிலையில் வீரமரணம் அடைந்த நான்கு காவலர்களுக்கு 41ஆம் ஆண்டு வீரவணக்கம் நாள் நேற்று (ஆக. 6) அனுசரிக்கப்பட்டது.
இதில் வடக்கு மண்டல ஐஜி சந்தோஷ்குமார், வேலூர் சரக டிஐஜி பாபு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, காவல் துறை அலுவலர்கள் கலந்துகொண்டு நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் க. தேவராஜ், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி, உயிரிழந்த காவலர்களின் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
மேலும் கடந்த 39 ஆண்டுகளாக நேரில் அஞ்சலி செலுத்திவந்த முன்னாள் டிஜிபி தேவாரம் இரண்டு ஆண்டுகளாக காணொலி மூலம் அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்வில் காவல் துறை சார்ந்த அலுவலர்கள், கட்சிப் பிரமுகர்கள், அரசுத் துறை சார்ந்த அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: தென்னிந்தியாவில் கட்டமைப்பு வசதிகளில் கோவை ரயில் நிலையம் முதலிடம்!