திருப்பத்தூர்: ஜோலார்பேட்டை அருகே தாமலேரிமுத்தூர் கே.பி.வட்டம் பகுதியில் வசிப்பவர் வீரபத்திரன் (55). இவர் சென்னையில் ரயில்வே கார்டாக வேலை செய்துவருகிறார். இவரது மனைவி பத்மா(48). இத்தம்பதியினருக்கு பிரகாஷ்(32), பிரதாப்(27) என்ற மகன்களும், சரளாதேவி(30) என்ற மகளும் உள்ளனர்.
பிரகாஷ் சென்னையில் ரயில்வே ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். ஏப்.2ஆம் தேதி வீரபத்திரன், மனைவி பத்மா ஆகிய இருவரும் மகன் வீட்டிற்குச் சென்றனர். அப்போது, வீரபத்திரனின் இளைய மகன் பிரதாப் மட்டும் வீட்டில் தனியாக இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவின் சாவியை எடுத்து, 30 சவரன் தங்க நகை, வெள்ளி கொலுசு, ரூ.3,000 பணம், விலை உயர்ந்த செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
விசாரணை: பின்னர் இதுகுறித்து பிரகாஷ், இவரது பெற்றோருக்கும், ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி கூட் ரோடு பகுதியில் காவல் ஆய்வாளர் மங்கைகரசி உள்பட காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபொழுது, சந்தேகத்தின் பேரில் சுற்றியிருந்த மர்ம நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதில், சேலம் மாவட்டம், வாழப்பாடி, கூட்டாத்துப்பட்டி பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்(35), சங்கர்(35), ராஜவேல்(38) சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(30), சங்கர் என்பவரின் மனைவி சந்திரா(30) என்பதும் இவர்கள் ரயில்வே ஊழியரான வீரபத்திரன் என்பவரின் வீட்டில் கொள்ளையடித்ததாகவும் கூறினர்.
இதனையடுத்து ஒரு பெண் உள்பட ஐந்து பேரை காவலர்கள் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலும், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கொள்ளையடிக்கப்பட்டு பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையும் படிங்க: 'நெல்லை அருகே பெண் காவல் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து'