திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் பகுதியில் தமிழ்நாடு அரசின் நியாய விலைக் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் அந்த பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்கி செல்கின்றனர். இந்த நிலையில், இந்த நியாய விலைக்கடையில் வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதேநேரம் நியாய விலைக் கடையில் வழங்கப்படும் அரிசி, பிளாஸ்டிக் அரிசி என குற்றம்சாட்டிய அப்பகுதி பொதுமக்கள், திடீரென நியாய விலைக் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறை மற்றும் தாசில்தார் குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, நல்ல அரிசி வழங்கப்படுவதாக தாசில்தார் குமார் கூறினார். மேலும் அவர், இதை தவறுதலாக பிளாஸ்டிக் அரிசி என பொதுமக்களிடம் வதந்தியை பரப்பி வருகின்றனர் என்றார். மேலும், இது நல்ல முறையில் வழங்கப்படும் அரிசிதான் எனவும், மக்கள் யாரும் பயப்படத் தேவையில்லை எனவும் கூறினார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் பேசிய தாசில்தார் குமார், பிளாஸ்டிக் அரிசி என குற்றம்சாட்டப்படும் ’இந்த அரிசியை தனக்கு சமைத்து தாருங்கள்’ என்றும், ’அவ்வாறு சமைத்து தரும் உணவை தானே சாப்பிடுகிறேன்’ எனவும் தெரிவித்தார். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: தியேட்டர் பாப்கார்னில் தவழ்ந்த கரப்பான்பூச்சி.. திருச்செந்தூரில் நடந்தது என்ன?