திருப்பத்தூர்: ராஜஸ்தான் மாநிலம் கௌகாத்தி பகுதியைச் சேர்ந்த மோட்டாராம் மகன் சென்னா ராம் (26). இவர், குஜராத் பதிவு எண்ணை கொண்ட சொகுசு காரில் பேன்சி ஸ்டோர் மூலப்பொருள்களை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்த விலைக்கு வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், இவர் திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், லாலாராம் என்பவருக்கு கொடுக்க 40 லட்சம் ரூபாயை எடுத்து சென்றபோது திருப்பத்தூர் அடுத்த கோணாப்பட்டு பகுதியில் அடையாளம் தெரியாத நான்கு பேர் தன்னுடைய காரின் மீது கல்லை தூக்கிப்போட்டு கண்ணாடியை உடைத்து வழிமறித்தனர். கத்தி மற்றும் துப்பாக்கி முனையில் 40 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர் அகிலன் புகார் அளிக்க வந்தவரின் காரை எதார்தமாக பார்த்தார். பின்னர் உடனடியாக புகார் அளிக்க வந்தவர் பொய் சொல்கிறார் என்பதை அறிந்து சந்தேகத்தின் அடிப்படையில் கிடுக்கு பிடி விசாரணை செய்தார்.
விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. புகார் கொடுக்க வந்த சென்னா ராமிடம் பணம் இல்லாததால் லாலாராமுக்கு கொடுக்க வேண்டிய பணம் கொள்ளை போனது போல் நாடகமாடினால், லாலாராமுக்கு பணம் கொடுக்கத் தேவையில்லை என நினைத்து இந்த அதிபுத்திசாலித்தனமாக நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
ஆனால், காவல் உதவி ஆய்வாளரோ அதனை கண்டுபிடித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து 5 ரூபாய் மதிப்புள்ள கண்ணாடியை உடைத்து, 40 லட்சம் ரூபாய்க்கு வழிப்பறி கொள்ளை நாடகம் நடத்தி, பொய் புகார் கொடுக்க வந்த சென்னா ராமின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
வழிப்பறி கொள்ளை நாடகத்தை நடத்தியவரை காவல் நிலையத்திலேயே வைத்து கண்டுபிடித்த உதவி ஆய்வாளரை உயர் அதிகாரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: வாணியம்பாடியில் பட்டப்பகலில் இருசக்கர வாகனத் திருட்டு!