திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளகுட்டை-துரிஞ்சிகுப்பம் செல்லும் சாலையில் நன்னேரி பகுதியைச் சேர்ந்த அரி என்பவர் மரக்கடை நடத்திவருகிறார்.
நேற்று (ஏப். 1) வழக்கம்போல் கடையில் ஐந்து பேர் பணிபுரிந்து வந்தநிலையில் மதிய உணவு இடைவேளையில் அனைவரும் வெளியில் சென்றுள்ளனர்.
அப்போது அப்பகுதியில் திடீரென வீசிய பயங்கர சூறாவளி காற்றால் மரக்கடையின் சுவர் இடிந்து விழுந்தது. மேற்கூரை, எடைக்கற்கள் 300 மீட்டர் தொலைவில் காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, அங்குள்ள வேளாண் நிலத்தில் விழுந்துள்ளது.
மேலும், எடை கருவி பறந்துசென்று மின்கம்பத்தில் தொங்கியது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்து அச்சத்தில் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர்.
மேலும், சூறாவளி காற்றின்போது கடையில் பணிபுரிபவர்கள் யாருமில்லாததால் நல்வாய்ப்பாக அனைவரும் உயிர் தப்பியுள்ளனர். இதில் சுமார் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.