திருப்பத்தூர்: கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழ்நாடு அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில், இன்று (ஜன.23) திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரின் முக்கிய சாலைகளில் காவல்துறையினர் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேவையில்லாமல் சாலையில் சுற்றித்திரியும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்தும், எச்சரிக்கை விடுத்தும் காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு வழங்கியுள்ள தரவுகளின்படி ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து வெளிநாடுகள், வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் சில காலணி தொழிற்சாலைகள் மற்றும் 75 விழுக்காடு தொழிலாளர்களுடன் இன்று (ஜன.23) வழக்கம் போல் செயல்பட்டு வருகின்றன. அதேபோல் அத்தியாவசிய தேவைகளான பால், உணவு, மருந்து கடைகள் ஆகியவை செயல்படுகின்றன.
வெளியூரிலிருந்து வரும் பயணிகளின் வசதிக்காக அரசு வழங்கியுள்ள தளர்வுகளின்படி ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் ஆகியவை ரயில் நிலையத்தில் செயல்படுகின்றன.
இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஆம்பூர் நகரின் பல்வேறு இடங்களில் இறைச்சிக் கடைகள், தேனீர் கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றை திறந்துவைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள் மீது காவல்துறையினர், வருவாய் துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்கின்றனர். மேலும் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆம்பூர் மோட்டு கொல்லை, ஜலால் ரோடு உள்ளிட்ட இடங்களில் ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் சாதாரணமாக சாலையில் சுற்றித்திரிகின்றனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆம்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 250 கடந்துள்ள நிலையில், பொதுமக்கள் விழிப்புணர்வு இன்றி சாலைகளில் சுற்றித் திரிவது பெரும் வேதனையை ஏற்படுத்துவதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.