திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாப்பனப்பள்ளி ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அப்பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக முறையான குடிநீர் வழங்கப்படாமல் இருந்ததாகவும், இது தொடர்பாக ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இது இதுவரை தண்ணீர் வருவதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தில், சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் கிராம மக்கள் என உமராபாத் - வாணியம்பாடி செல்லும் சாலையில், அரசு பேருந்தை சிறைபிடித்து காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்றத் தலைவர் பூபதி மற்றும் துணைத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், ஊராட்சி மன்றத் தலைவரையும், துணைத் தலைவரையும் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டம் துவங்கி சுமார் 2 மணி நேரத்திற்கு சாலை மறியலில் ஈடுபட்டும் சம்பவ இடத்திற்கு அதிகாரிகள் வரவில்லை எனத் தெரிகிறது.
அதனால் மேல் அதிகாரிகள் வந்து தீர்வு காணும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக கூறி, அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் செல்லும் சாலையில் போராட்டம் நடைபெற்றதால், மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லுவோர் கடும் அவதிக்குள்ளாகினர்.
அதன் பின்னர் இந்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினரை (எம்எல்ஏ) சூழ்ந்து சிறைபிடித்த கிராம மக்கள் எம்எல்ஏ வில்வனாதனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக அந்த பகுதி வழியே செல்லும், வாணியம்பாடி - உமராபாத் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.