திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா வெலக்கல்நத்தம் அடுத்த நந்திபெண்டா பகுதியில் 46ஆம் ஆண்டாக மாபெரும் எருது விடும் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இந்த விழாவில் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து சுமார் 200க்கு மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.
இவ்விழா தொடங்குவதற்கு முன்பாக அனைத்து காளைகளுக்கும் கால்நடை மருத்துவரைக் கொண்டு பரிசோதனை நடத்தப்பட்டு, அதன்பின்னரே அவை போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டன.
இவ்விழாவில் அதிவேகமாக குறைந்த நேரத்தில் ஓடிய 20க்கும் மேற்பட்ட காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அப்படி வெற்றிபெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், இரண்டாவது பரிசாக ரூ.40 ஆயிரமும், மூன்றாவது பரிசாக ரூ.30 ஆயிரமும் வழங்கப்பட்டது.
மேலும் இப்போட்டியைக் காண இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்திருந்ததால், அங்கு 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அதேபோல் இப்போட்டியின்போது காயமடைந்த 25க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கபட்டது. அவர்களில் படுகாயமடைந்த மூன்று பேர் மட்டும் மேல் சிகிச்சைக்காக நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க: இயற்கை விவசாயத்தை கையிலெடுத்து பசுமை கண்ட பட்டதாரி!