திருப்பத்தூர்: கந்திலி அருகே மரத்திலிருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த கூலித்தொழிலாளியில் உடல் உறுப்புகள் தானம் செய்ய, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு அவரது உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்படும் என தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த முத்தம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தன்(38). மரம் ஏறும் தொழில் செய்து வரும் இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், நேற்று (டிச.25) காலை பள்ளத்தூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரின் தென்னை மரத்தில் தேங்காய் பறிப்பதற்காக வேலைக்குச் சென்றுள்ளார்.
அங்கு மரத்தின் மீது ஏறி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், திடீரென எதிர்பாராத விதமாக 70 அடி உயரம் கொண்ட தென்னை மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து, அங்குள்ளவர்கள் அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் மூளைச்சாவு ஏற்பட்டு கோமா நிலையில் உள்ளார். எனவே, இவரை காப்பாற்றுவது மிகவும் கடினம் என தெரிவித்துள்ளனர்.
இதனால், மூளைச்சாவு அடைந்த தொழிலாளி முருகானந்தன் உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தலைமையில், உடல் உறுப்பு தானம் செய்ய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு பிறகு முருகானந்தனின் உறவினர்களிடம் உடலை ஒப்படைக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரம் ஏறி தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்ததுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், கூலி தொழிலாளியின் குடும்பத்திற்கு தமிழக அரசு மற்றும் அரசியல் பிரமுகர்கள் உதவி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: புகாரை விசாரிக்கத் தாமதம்: கரூரில் செல்போன் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரால் பரபரப்பு..