திருப்பத்தூர்: தனியார் காலணி தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சரிவர ஊதியம் மற்றும் போனஸ் வழங்காததால், தொழிலாளர்கள் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வைவிடப்பட்டது.
ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான காலணி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக சரிவர ஊதியம் மற்றும் போனஸ் வழங்காததாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருந்தது. இதனைக் கண்டித்து காலணி தொழிலாளர்கள், ஏற்கனவே கடந்த மாதம் தொழிற்சாலை வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் செய்தி அறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈட்பட்டனர். மேலும், ஒரு வார காலத்திற்குள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசி, ஊதியம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என காவல்துறையினர் உறுதியளித்தனர். அந்த நம்பிக்கையின் பேரில் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு, மீண்டும் பணிக்கு திரும்பினர்.
இந்நிலையில், தற்போது ஒரு வாரகாலத்திற்கு மேலாகியும், தொழிற்சாலை நிர்வாகம் தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் போனஸை வழங்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தொழிற்சாலையில் பணியாற்றும் சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், நேற்று (ஜன.09) தொழிற்சாலை வளாகத்திலேயே சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து தொழிற்சாலை நிர்வாகம் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் ஊதியம் மற்றும் போனஸை வழங்குவதாக உறுதியளித்ததன் பேரில், போராட்டத்தை கைவிட்டு தொழிலாளர்கள் கலைந்து சென்றனர்.