திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள தளவாய்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் மகுடீஸ்வரன் (35) இவரது மனைவி கமலா (31) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்தத் தம்பதிக்குத் திருமணமாகி 10 ஆண்டுகளான நிலையில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், கமலாவின் திருமணமாகாத தாய் மாமன் சுரேஷ் தினமும் காலையும் மாலையும் கமலாவின் வீட்டுக்கு வந்து சென்றதில் அவருடன் கமலாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் திருமணம் மீறிய உறவாக மாறியது. இதையறிந்த மகுடீஸ்வரன் தனது மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் கமலா தனது கணவருக்குத் தெரியாமல் சுரேஷை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து வந்துள்ளார். இதனால் மகுடீஸ்வரன் கமலாவை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு பிரிந்து தனிமையில் வசிக்கத் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிலிருந்த கமலாவை திடீரென சந்தித்த மகுடீஸ்வரன், சுரேஷுடனான உறவைத் துண்டித்துவிடுமாறு தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு கமலா பதில் எதுவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மகுடீஷ்வரன் தன் முதுகுப் பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாலை எடுத்து தனது மனைவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
தொடர்ந்து கமலாவின் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிப்போய் மகுடீஸ்வரனை தடுத்து, கமலாவை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அலங்கியம் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கின்றனர். ஆனால், காவல் துறையினர் வருவதற்கு முன்னரே, ரத்தக்கறையுடன் தாராபுரம் காவல் நிலையத்தில் மகுடீஸ்வரன் சரணடைந்துள்ளார்.
தொடர்ந்து அவரைக் கைது செய்த காவல் துறையினர், அவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.