திருப்பத்தூர்: ஆம்பூர் அடுத்த ஓணாங்குட்டை கிராமத்தை சேர்ந்த 45 பேர் கடந்த 8ஆம் தேதி 2 வேன்களில் கர்நாடக மாநிலம் தர்மஸ்சாலாவிற்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
இந்த நிலையில் இன்று (செப்.11) காலை அனைவரும் சுற்றுலாவை முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பி கொண்டிருந்த போது நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேன் பஞ்சராகியுள்ளது. இதனை தொடர்ந்து வேன் ஓட்டுநர் வேனை, சாலையில் நிறுத்தியிருந்த நிலையில் வேனில் இருந்தவர்கள் சாலையில் நின்று கொண்டிருந்து உள்ளனர்.
அப்பொழுது, அதே சாலையில் வேகமாக வந்த லாரி பஞ்சராகி நின்று கொண்டிருந்த வேன் மீது அதிவேகமாக மோதியுள்ளது. இதில் வேன் சாலையில் நின்று கொண்டிருந்தவர்கள் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும், இந்த விபத்தில் படுகாயம் அடைந்த லாரி ஓட்டுநர் மற்றும் கிளீனர் உட்பட 10 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக வாணியம்பாடி, நாட்றம்பள்ளி மற்றும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: ராணுவம் - பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சூடு - 7 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து நாட்றம்பள்ளி காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர். காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த பெண்கள் மீரா, தெய்வானை, சேட்டாம்மாள், தேவகி, சாவித்திரி, கலாவதி, கீதாஞ்சலி என்பது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் மற்றும் அரசு அதிகாரிகள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள சடலங்களை பார்த்து அவரது உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர். பின் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் எ.வ.வேலு கூறும்போது, பொதுவாக பொதுமக்கள் இரவு நேர பயணத்தை தவிர்க்க வேண்டும். 21 மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு குறித்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் அதிகாலையில் இந்த செய்தியை தொலைக்காட்சி வாயிலாக கேட்டு மிகவும் மனம் வருந்தினார். அதனைத் தொடர்ந்து என்னிடம் தொடர்பு கொண்டு உடனடியாக அந்த இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்று தெரிவித்தார்.
தற்போது, விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் மற்றும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக முதல்வர் உயிரிழந்த குடும்பத்திற்கு ரூபாய் 1 லட்சமும் படுகாயம் அடைந்தவருக்கு ரூபாய் 50 ஆயிரம் அறிவித்துள்ளார் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சாலையோரம் நின்ற வேன் மீது மினி லாரி மோதி கோர விபத்து - 7 பெண்கள் பலி!