ஓசூர் பகுதியில் இருந்து சென்னைக்கு காய்கறிகளை ஏற்றி சென்ற மினி லாரி சென்னையில் காய்கறிகளை இறக்கிவிட்டு மீண்டும் ஓசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
அந்த மினி லாரியை ஓசூர் அடுத்துள்ள பேரண்டப்பள்ளி பகுதியை சேர்ந்த கிரண்(21) ஒட்டி சென்றுள்ளார். அவருடன் அதேபகுதியை சேர்ந்த பிரவீன் (21) என்பவரும் உடன் சென்றுள்ளார்.
இந்நிலையில் அந்த மினி லாரி திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக, மினி லாரியின் முன்பக்க டயர் கழன்றது.
இதனால் கட்டுபாட்டை இழந்த மினி லாரி அருகில் இருந்த பாலத்தின் மீது மோதியது. இந்நிலையில், மினி லாரியானது 20அடி உயரமுள்ள பாலத்தின் மேல் அந்தரத்தில் தொங்கியவாறு நின்றது.
அதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக லாரியில் இருந்த ஓட்டுநர் கிரண் மற்றும் பிரவீன் ஆகியோரை சிறிதும் காயமின்றி மீட்டனர். மேலும் இவ்விபத்து குறித்து வாணியம்பாடி கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கீழடி மியூசியம் எவ்வாறு அமையவுள்ளது? - அனிமேஷன் வீடியோ வெளியீடு!