திருப்பத்தூர்: உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா பகுதியை சேர்ந்தவர் ரிஷார். இவரது மனைவி முபினா (54) 20 வருடங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். அதன் பின்னர் சுமார் 11 வருடங்களுக்கு முன்பு திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் முபினா சுற்றி திரிந்துள்ளார்.
அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட காரணத்தால், ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் அமைந்துள்ள மனநலம் பாதிக்கப்பட்டோர் மறுவாழ்வு இல்லத்தில் போலீசார் ஒப்படைத்தனர். 11 வருட காலமாக முபினாவை மனநல காப்பக நிறுவனர் ரமேஷ் பாதுகாத்து வந்தார். இரண்டு வாரங்களுக்கு முன்பு (நவ. 12) ஆக்ரா பகுதியில் ஏர் ஃபோர்ஸில் வேலை செய்து வரும் திருப்பத்தூரை சேர்ந்த அருண்குமார் இந்த மனநல காப்பகத்திற்கு வந்தார். அவருடைய உறவினர் பிறந்த நாளை முன்னிட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு வழங்கினார்.
அருண்குமாரிடம் முபினா பற்றி ஆக்ரா பகுதியில் விசாரிக்குமாறு மனநல காப்பக நிறுவனர் ரமேஷ் கூறியுள்ளார். மீண்டும் பணிக்கு ஆக்ராவிற்கு சென்ற பொழுது காவல் துறையினரிடம் அருண்குமார் முபினா குறித்து தகவல் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் முபினாவின் குடும்பத்தை கண்டுபிடித்து தகவல் தெரிவித்தனர்.
அவரது குடும்பத்தினர் நான்கு பேர் திருப்பத்தூருக்கு நேற்று (நவ. 28) திரும்பி, முபினாவை சந்தித்து கட்டித்தழுவி அழுதனர். உரிய நடைமுறைக்கு பின்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அமர்குஷ்வாஹா, மனநல காப்பக நிறுவனர் ரமேஷ் ஆகியோர் முபினாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அப்போது முபினா குடும்பத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கோவை குண்டுவெடிப்பு வழக்கு; இருவர் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிப்பு