திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகி ஒருவரின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஆம்பூர் வருந்திருந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "புதிய முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அனைத்து தரப்பினரும் பாராட்ட கூடிய அளவில் செயல்பட்டு வருகிறது. இல்லாத குற்றச்சாட்டை ஒருவர் மீது சுமத்தி அதன் வழியாக அவர்களை துன்புறுத்த நினைத்தால் அதற்கு பெயர் பழிவாங்கும் நடவடிக்கை என கொள்ளலாம்.
ஆனால் கோடநாட்டில் சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த சம்பவங்களுக்கு பின்னணி யார் என்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் சென்று கொண்டிருக்கின்றன.
கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களின் பெயரால் சென்னை பல்கலைக்கழகத்தில் இலக்கியத்திற்கான உயர் இருக்கை ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்து தர வேண்டும் என்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இந்த சட்டப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே அதனை தமிழ்நாடு அரசு அறிவித்தால் அது மிகப்பெரிய மகிழ்ச்சியாக இருக்கும். குறிப்பாக தமிழ் இலக்கியத்துக்கு நவீன தமிழ் இலக்கியத்துக்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கும் என தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தியாவுடைய தேசிய மொழியாக இருக்க கூடிய தொன்மையும் இலக்கியமும் பழமையும் மிக்க எங்கள் தமிழ் தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருப்பதற்கு தகுதியான மொழி என்று நாடாளுமன்றத்திலே வாதிட்டு இந்தியாவின் கவனத்தை தன் மீது ஈர்த்தவர் கண்ணியத்திற்குரிய காயிதேமில்லத் இஸ்மாயில் சாஹிப். அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்பட்டு இருந்தாலும் அது மக்களுக்கு தொடர்பற்ற முறையில் இருந்து கொண்டு இருக்கிறது. எனவே அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் வகையில் காயிதே மில்லத் மணிமண்டபத்தில் பிரம்மாண்டமான ஒரு நூலகத்தை அமைத்து நிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய அளவுக்கு அங்கே மாற்றங்கள் ஏற்பாடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
விடுதலைப் போராட்ட வீரருமான மருதநாயகம் அவர்களுக்கு மதுரையிலே முகத்துடன் கூடிய ஒரு மணி மண்டபத்தை அமைக்க தமிழ்நாடு அரசு ஆவண செய்ய வேண்டும் என வேண்டுகோள் வைக்கின்றோம்" என்றார்.