திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர், கார்த்திக் சிதம்பரம் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர் கூறுகையில், "பெரியாரின் சிந்தனைகள் அவர் வாழ்ந்த காலத்தைவிட முற்போக்கானது. அதனை ஏற்றுக்கொள்ள முடியாமல், இந்தியாவில் இந்துத்துவ கொள்கைகளைத் திணிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள்தான் பெரியாரை இழிவுபடுத்த நினைப்பவர்கள். இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் சிறையில் இருந்து சசிகலா வெளியில் வந்தால் என்னைப் பொறுத்தவரையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் கையில் செல்லும், தினகரன் மீண்டும் வருவார். கரோனா தொற்று இந்தியாவில் 10 லட்சத்தைக் கடந்துள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் 25 லட்சத்தைக் கடக்கும். எனவே அரசாங்கத்தை நம்பி பயன் இல்லை, மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
விரைவில் இதற்கான தடுப்பூசி வரும் என நினைக்கிறேன். தனிப்பட்ட முறையில் செவ்வாய் தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று பால் அபிஷேகம் செய்பவன், நான். முருக பக்தன் ஆன நான் கந்த கஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்.
எந்த ஒரு மத நம்பிக்கையையும் கொச்சைப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. இதற்கு அந்த அமைப்பினர் மன்னிப்பு கோரியிருப்பதை அறிந்தேன். அது உண்மையாக இருந்தால், அத்தோடு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை விரைவில் வர இருக்கிறது. அதற்கு அவர்கள் குர்பானி கொடுத்து கொண்டாடுவது வழக்கம், அதை கொடுக்கும் போது அவர்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதற்கும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும், அரசுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றேன்" எனத் தெரிவித்தார். இதையும் படிங்க: நள்ளிரவில் பெரியார் சிலை மீது காவி பெயிண்டை ஊற்றிய சமூக விரோதிகள்!