திருப்பத்தூர்: பழைய பேருந்து நிலையத்தில் அம்மா வட்ட திராவிட கழகம் சார்பில் ஏடி கோபால் நூற்றாண்டு விழா, திராவிட கழக தலைவர் கி.வீரமணியின் 90ஆவது பிறந்தநாள் விழா மற்றும் விடுதலை நாளிதழின் சந்தா வழங்கும் விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய கனிமொழி, ‘பேராசிரியர் அன்பழகன் தமிழ் மண்ணுக்காகவும், தமிழ் மொழிக்கவும், தந்தை பெரியாரின் பகுத்தறிவு வளர்க்க வேண்டும் என்பதற்காகவும் அயராது பாடுபட்டார். அதைப்போலவே நாமும் அவர் வழியில் சென்று மண்ணையும் மனிதனையும் காப்பாற்ற பாடுபட வேண்டும்.
கலைஞர் தனக்கு ஆலோசனை வேண்டும் என்றால் பேராசிரியர் தான் அழைப்பார். எந்த ஒரு முடிவை எடுத்தாலும் பேராசிரியரின் கருத்தை கேட்காமல் முடிவெடுக்க மாட்டார். கலைஞருக்கும் பேராசிரியருக்கும் கொள்கையின் அடிப்படையில் உறவு இருந்தது. சிதந்தை பெரியாரின் கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்டவர். அவர் சொன்ன கருத்தை நான் இன்றும் பின்பற்றி வருகிறேன்.
அவர் சொன்ன கருத்து என்னவென்றால், தனிப்பட்ட வாழ்க்கையில் நான் என்ற உணர்வை தூக்கி எறிந்து விட்டு சமூகத்தின் மீது மட்டுமே அக்கறை காட்ட வேண்டும். பொது வாழ்வில் வந்துவிட்டால் வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை என்று அரசியல் பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.
அதையே நான் இன்றும் பின்பற்றி வருகிறேன். கொள்கை அடிப்படையில் சுயமரியாதை உலகத்தை உருவாக்க வேண்டும். சமூக நீதிக்காக நாம் பாடுபடுகிறோம். நமக்கு எதிராக உள்ளவர்கள் சமூக அநீதிக்காக செயல்படுகிறார்கள். புதிய கல்வி கொள்கை என்ற ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்துகிறது. புதிய கொள்கையால் மீண்டும் அடிமை தனத்திற்கு மக்களை எடுத்துச் செல்கிறது.
ஒருவர் ஒரு பள்ளியில் படித்தால் கூட அந்தப் பள்ளி இயங்க வேண்டும் என்பது திராவிட ஆட்சியின் மாடல். ஆனால், புதிய கொள்கை என்ற திட்டத்தினால் அனைவரையும் ஒரே இடத்தில் கொண்டு வர வேண்டுமென பள்ளிகளை மூடச் சொல்கிறது. 10% இட ஒதுக்கீடு என்ற அடிப்படையில் தனக்கான இட ஒதுக்கீட்டை உருவாக்கியுள்ளது. இந்த சமூகத்தையும் இந்த மண்ணையும் காப்பாற்ற நாம் ஒவ்வொருவராக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி, பொதுப்பணிகள் மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ வ வேலு, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், திராவிட இயக்க தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் சுப. வீரபாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, சட்டபேரவை உறுப்பினர்கள் தேவராஜ், நல்லதம்பி, வில்வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:வாட்ச் விலை ரூ.3.5 லட்சமா? - அண்ணாமலையின் பதில் என்ன?