திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று உள்ளிட்ட அனைத்து வகையான நோய்களுக்கும் சென்னை, சேலம், தருமபுரி, சேலம் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரி ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டு காலதாமதமாக முடிவு தெரிகிறது.
இந்நிலையில் இன்று (ஜூன் 19) திருப்பத்தூர் அரசு வட்ட மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதல்முறையாக 24 மணி நேரமும் செயல்படும் கரோனா தொற்று மற்றும் அனைத்து நுண்கிருமிகளையும் கண்டறியும் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு பரிசோதனைக் கருவிகள் கொண்ட மையம் தொடங்கப்பட்டுள்ளது.
இதனை வணிகவரி, பத்திரப்பதிவு துறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல் ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். அப்போது செய்தியாளர்களை அமைச்சர் கே.சி.வீரமணி சந்தித்துப் பேசினார்.
இதுகுறித்து கே.சி. வீரமணி கூறியதாவது; 'இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள வட்ட அரசு மருத்துவமனைகளில், திருப்பத்தூர் வட்ட அரசு மருத்துவமனைக்கு கரோனா நோய் மற்றும் அனைத்து விதமான நோய்களைக் கண்டறியும் இரண்டு பரிசோதனைக் கருவிகள் கொண்ட மையத்தை, அமைத்து தந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திருப்பத்தூர் மாவட்ட மக்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலர்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்' எனக் கூறினார்
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள், மாவட்ட கண்காணிப்பாளர் விஜயகுமார், திருப்பத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் திலீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.