திருப்பத்தூர்: தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்றிரவு முதல் விடிய விடிய மழை பெய்தது. இதனால் புதுப்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை தண்ணீர் சூழ்ந்தது.
முட்டளவுக்கு தண்ணீர் சூழ்ந்ததால் பாதசாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகினர். ரயில்வே சுரங்கப்பாதை அமைந்துள்ள சாலை சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் குப்பம் பகுதிக்கு செல்லும் பிரதான சாலை ஆகும். இரவு முழுவதும் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப்பாதை நீச்சல் குளம் போல் காட்சியளித்தது.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலமுறை புகார் அளித்தும் இப்பிரச்னைக்கு அதிகாரிகள் தீர்வு காணவில்லை என்றும் குற்றம்சாட்டினர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், "மழைக்காலங்களில் இந்த ரயில்வே சுரங்கப்பாதை நீரில் மூழ்கி போக்குவரத்து பாதிப்படைகிறது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட ஆட்சியர் தனது குடியிருப்புக்கு இந்த வழியாக தான் செல்ல வேண்டும். மழைநீர் வடிந்து செல்ல உரிய நடவடிக்கை எடுப்பது அவசியம். இல்லையென்றால் போராட்டத்தை தொடர்வோம்" என்றனர்.
பின்னர் தகவலறிந்து வந்த நகர்மன்ற தலைவர் சங்கீத வெங்கடேசன், இப்பிரச்னைக்கு ஒரு வாரத்தில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதை ஏற்றுக் கொண்ட பொதுமக்கள், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை மோதுமா ‘மோக்கா’ புயல்? - சென்னை வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்