திருப்பத்தூர்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புதியதாக பிரிக்கப்பட்ட திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.110 கோடியில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகம், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க திருப்பத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்தார். விழாவின் நிகழ்வுகளை முடித்த முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்கள் மத்தியில் பேசினார்.
அப்போது, “நீண்ட வரலாற்றுப் பெருமை கொண்டதும், 1,500 ஆண்டுகள் பழமையான சோழ, விஜய நகர ஹாய்சாய்கள் ஆண்டதும்தான் திருப்பத்தூர். 16ஆம் நூற்றாண்டில் திருவனபுரம் பெயர் மாறி, தற்போது திருப்பத்தூர் ஆகியுள்ளது. 10 புனிதமான ஊர் இருந்ததால் திருப்பத்தூர் என்றும் அழைக்கப்படுகிறது. ஜவ்வாது மலைத் தொடர்களை கொண்ட ஏலகிரி மலையை கொண்ட இயற்கை சூழலில் அமைந்துள்ளது, திருப்பத்தூர் மாவட்டம்.
நிறைவேற்றிய திட்டங்கள்: இம்மாவட்டத்தில் 1,703 பேருக்கு வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. 1,741 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. 85 லட்சம் மகளிர், இலவசப் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளனர். 20,518 பேரின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் பேர் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ மூலம் பயன் பெற்றுள்ளார்கள். ‘இன்னுயிர் காப்போம்’ திட்டத்தின் மூலம் 196 பேர் உயிர் பிழைத்துள்ளனர்.
முக்கிய அறிவிப்புகள்: கொல்லகுப்பம், வடங்குப்பம், கொடும்பாம்பள்ளி ஆகியப் பகுதிகளில் பாம்பாறு மீது பாலம் கட்டப்படும். ஏலகிரி மலையில் சாகச சுற்றுலா தளம் ரூ.2,98,00,000 மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். ஆண்டியப்பனூரில் படகு குளம், ஆம்பூர் ஊட்டல் சரஸ்வதி கோயில் மேம்பாடு செய்யப்படும். ஏலகிரி ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்படும். நாட்றம்பள்ளியில் புதிய அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்.
விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட அனைவருக்கும் வழிகாட்டும் அரசாக திமுக உள்ளது. தற்போது உள்ள நவீன தமிழ்நாடு, கருணாநிதியால் உருவாக்கப்பட்டது. நமது திட்டங்கள் இந்தியா முழுமைக்கும் அவசியமானது. மாநிலத்தின் முதலமைச்சர் என்பதால் மாவட்டங்களை நான் மறந்துவிடவில்லை. அனைத்து மாவட்டத்தின் வளர்ச்சியை நான் முக்கியமானதாக நினைக்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சி: ஒவ்வொரு தனி மனிதனின் கோரிக்கையையும் நிறைவேற்றி வருகிறேன். இது தான் திராவிட மாடல் ஆட்சியின் இலக்கணம். உங்கள் பிள்ளைகளை நன்றாக படிக்க வைக்க வேண்டும். படித்து முடித்தவர்கள் வேலை தேடத்தான், ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். தமிழ்நாட்டை முன்னேற்றவே எனது சக்தியை மீறி செயல்பட்டு வருகிறேன்.
எனது உடல் சோர்வையும் பொருட்படுத்தாமல் உழைத்து வருகிறேன். மக்களின் முகத்தைப் பார்த்தால் மாத்திரைகளே தேவையில்லை. நான் மட்டும் அல்ல, அமைச்சர்கள், அலுவலர்களும் தன் சக்தியை மீறி உழைத்து வருகின்றனர். இந்தியாவிற்கு முன்மாதிரியான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி இருக்கும்” எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: எல்லாத்தையும் டெலிட் பண்ணிடுங்க- பாலியல் சீண்டல் செய்த ஆசிரியரின் பகீர் ஆடியோ